வெளியார் அதிகரிப்பும் தமிழர் வாழ்வுரிமையும் – சென்னையில் தமிழகம் தழுவிய சிறப்பு மாநாடு

start: Sep 28, 2014 10:00AM
End: Sep 28, 2014 07:00PM

Venue: செ.தெ. நாயகம் பள்ளி, தியாகராய நகர், சென்னை.

Description: https://fbcdn-sphotos-b-a.akamaihd.net/hphotos-ak-xap1/v/t1.0-9/10613157_591605434281818_3785138023470461733_n.jpg?oh=49d3ff00fe4f2bca740d5300fdf6c084&oe=54656F7A&__gda__=1416530342_625e767818ad050632308a6cc8080740

==========================================
வெளியார் அதிகரிப்பும் தமிழர் வாழ்வுரிமையும்
==========================================
செப்டம்பர் – 28 அன்று சென்னையில்
தமிழகம் தழுவிய சிறப்பு மாநாடு
==========================================
தி.பி. 2045 புரட்டாசி 12 2014 செப்டம்பர் 28
காலம் ஞாயிறு காலை 10 மணி
முதல் மாலை 7 மணி வரை
==========================================

கும்மிடிப் பூண்டியிலிருந்து குமரிமுனை வரை, குமுளியிலிருந்து நாகை வரை, சென்னைப் பட்டணத்திலிருந்து சிற்றூர் வரை அன்றாடம் ஆயிரம் பல்லாயிரமாய் அயல் மாநிலத்தவர் குடியேறுகிறார்கள். தமிழ்நாட்டிற்குள் புகும் இந்த வெளியார் வெள்ளம், தமிழர் தாயகக் கட்டமைப்பை உடைத்து, கலப்பினத் தாயகமாகத் தமிழ்நாட்டையும், புதுச்சேரியையும் மாற்றிவிடுமோ என்ற அச்சம் விவரமறிந்த தமிழர் அனைவர் நெஞ்சிலும் முள்ளாய்க் குத்துகிறது. தமிழர்களின் மக்கள் தொகைக்குச் சமமாய் வெளியார் எண்ணிக்கை உயர்ந்து விடும் அபாயம் உள்ளது.

வெளிமாநிலத்தவர் வேலை தேடி வெறுங்கையோடு வருகிறார்கள். ஆனால் வெறும் தலையோடு வருவதில்லை. வடவராயிருந்தால் இந்தி ஆதிக்கம், இந்தியாவின் தலைமைக் குடிகள் தாங்கள் என்ற தலைக்கனத்துடன் வருகிறார்கள். இந்திக்காரர்களும், வெளி மாநிலங்களிலிருந்து வருபவர்கள் அவரவர் மொழியை, பண்பாட்டைத் தமிழ்நாட்டில் பரப்புகிறார்கள்.

இந்நிலை அன்றாடம் தொடர்ந்தால் தமிழ்நாட்டில் தமிழ் மொழி மற்றும் தமிழர்களின் பண்பாடு என்னவாகும்? தமிழகம் கலப்பினத் தாயகமாக மாறும். சொந்த மண்ணிலேயே தமிழர்கள் அயலார்க்குக் கீழ்ப்பட்டு, அவர்களை அண்டிப் பிழைக்கும் நிலை ஏற்படும்.

ஏற்கெனவே தமிழ் நாட்டின் பொருளாதார ஆதிக்கம் மார்வாடி, குசராத்தி, மலையாளி மற்றும் பார்சிப் பெரு முதலாளிகள், பெரு வணிகர்கள் கையில் இருக்கிறது. அவர்களைச் சார்ந்து அவர்களின் தயவில் தொழிலும் வணிகமும் நடத்தும் நிலையில்தான் தமிழர்கள் இருக்கிறார்கள். தமிழர்களிடமிருந்த துணி ஆலைகள், நூற்பாலைகள், சிமெண்ட் ஆலைகள், மோட்டார் தொழிற்சாலைகள், திரைப்படத் தொழில், நிதி நிறுவனங்கள், தங்க வணிகம், முதலியவை மார்வாடி, குசராத்தி, மலையாளிகளின் ஏகபோகங்களாக மாறிவிட்டன. கணிப்பொறித் துறை, பெயிண்ட், எழுதுபொருள்கள், அச்சுத் தொழில்கள் அனைத்தும் மார்வாடி, குசராத்திகள் வசம் உள்ளன.

உலகமயம் என்ற பெயரில், மோட்டார் உற்பத்தியில் அமெரிக்காவின் ஃபோர்டு, நிசான், பிரித்தானியாவின் வால்வோ, சப்பானின் ஹுண்டாய், மார்வாரிகளின் மகிந்திரா, அசோக் லைலேண்டு, பார்சியின் டாட்டா, குசராத்தியின் பஜாஜ் போன்ற வெளியார் நிறுவனங்கள்தான் தமிழகத்தில் கோலோச்சுகின்றன. கைப்பேசிக் கருவிகள் உற்பத்தியிலும் பன்னாட்டு நிறுவனங்களின் ஏகபோகமே நிலவுகிறது.
மனை வணிகத்தில் (ரியல் எஸ்டேட்) மார்வாரி – குசராத்திகளே ஆதிக்கம் செலுத்துகின்றனர். இப்போது அதில் பன்னாட்டு நிறுவனங்கள் நுழைந்துள்ளன. திண்டுக்கல், தேனி, திருநெல்வேலி மாவட்டங்களில் ஒவ்வொரு இடத்திலும் மலையாளிகள் நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலங்களை வாங்கி வேலி போட்டு வைத்துள்ளனர்.

உலகமயப் பொருளியல் இந்தியாவை வளர்க்கிறது என்று ஆட்சியாளர்களும் சில அரசியல்வாதிகளும் சில பொருளியல் வல்லுநர்களும் கூறுகிறார்கள். இந்த வளர்ச்சியில் தமிழர்களாய்ப் பிறந்த தொழில் முனைவோர்க்குத் தமிழகத்திலேயே முதலிடம் கிடைக்காதது ஏன்? இரண்டாவது இடம் கூடக் கிடைக்காதது ஏன்?

இங்கு சொல்லப்படும் தொழில் வளர்ச்சி, தமிழ் நாட்டை அயல் இனத்தாரின் வேட்டைக் காடாக மாற்றியுள்ளது. தமிழர்களாய் உள்ள தொழில் முனைவோரைப் பின்னுக்குத் தள்ளுகின்றது. அயலாரை அண்டிப் பிழைப்போராகத் தமிழர்களை மாற்றியுள்ளது. இந்தப் பன்னாட்டு நிறுவனங்கள் தமிழகத்தின் சுற்றுச் சூழலை மாசுபடுத்தி, இயற்கை வளத்தை மலடாக்கிக் கொண்டுள்ளன.

தமிழ்நாட்டில் உள்ள இந்திய அரசு நிறுவனங்களான திருச்சி கொதிகலன் ஆலை, நெய்வேலி அனல் மின் நிலையம், ஆவடி, திருச்சி போன்ற இடங்களில் உள்ள படைத்துறைத் தொழிற்சாலைகள், தொடர்வண்டித்துறை, வருமானவரி, உற்பத்தி வரி, சுங்க வரி அலுவலகங்கள் எனப் பலவற்றிலும் வெளி மாநிலத்தவர்களையே மிக அதிக எண்ணிக்கையில் வேலைக்குச் சேர்க்கின்றனர்.

இந்திய அரசுத் தொழிற்சாலைகள் 1950களில் தொடங்கப்பட்டபோது அந்தந்த மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்கள் வழியாக வேலைக்கு ஆள் எடுக்க வேண்டும் என்று அரசாணை போடப்பட்டது. ஆனால் காலப் போக்கில் அந்தந்த நிறுவனங்களும் இந்தி அல்லது ஆங்கிலத்தில் தேர்வு நடத்தி வடமாநிலங்கள் உள்ளிட்ட வெளிமாநிலத்தவர்களை அதிகமாகச் சேர்த்துத் தமிழர்களின் பிள்ளைகளை வேலைக்கு எடுக்காமல் “இனஒதுக்கல்” கொள்கையைக் கடைபிடிக்கின்றன. இந்த இன ஒதுக்கல் கொள்கையை எதிர்த்துப் போராட்டங்கள் நடந்து வருகின்றன.

தன்நிதிக் கல்வி நிறுவனங்கள் தொடங்கும் வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு வெளி மாநிலத்தவர்கள் நிகர்நிலைப் பல்கலைக் கழகங்களையும், பொறியியல் கல்லூரி போன்ற உயர்நிலைக் கல்வி நிறுவனங்களையும் தமிழகத்தில் தொடங்கியுள்ளனர்.

தமிழ்நாட்டில் உள்ள உயர்கல்வி நிறுவனங்ளில் வெளிமாநிலத்தவர்களே அதிக எண்ணிக்கையில் படிக்கின்றனர். அவர்கள் தங்கள் தங்கள் மொழி மற்றும் பண்பாட்டைப் பரப்புகின்றனர்.

செய்தி, ஊடகத்துறையில் வெளிமாநிலத்தவர் ஆதிக்கம் பெருகிவருகிறது. இவ்வாறான வெளியார் ஆதிக்கம் அனைத்துப் பிரிவுத் தமிழர்களின் வாழ்வுரிமைகளைத் தமிழ்நாட்டிலேயே பறிக்கிறது. ஒடுக்கப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான சமூக நீதியையும் பறிக்கிறது.

தொழில், வணிகம், வேலை, கல்வி, திரைப்படத்துறை, செய்தி ஊடகத்துறை முதலியவற்றில் வெளியாரின் ஆதிக்கம் நிலவும்போது தமிழ்நாடு தமிழர்களின் தாயகமாக நீடிக்குமா?

1956 ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்ட, மாநிலங்கள் மறுசீரமைப்புச் சட்டத்தின் கீழ் வளர்ச்சியடைந்த மொழி மற்றும் அம்மொழி பேசும் மக்களின் பண்பாடு ஆகியவற்றைப் பாதுகாக்கவும் வளர்க்கவும்தான் மொழிவழி மாநிலங்கள் அமைக்கப்பட்டன. அதன்படி தமிழர்களின் தாயகமாகத் தமிழ்நாடு 1956 நவம்பர் 1 ஆம் நாள் வடிவமைக்கப்பட்டது.

தமிழர்களுக்கான தாயக எல்லை ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே வரையறுக்கப்பட்டுள்ளது. வடக்கே திருப்பதியிலிருந்து தெற்கே கன்னியாகுமரி வரை உள்ள நிலம் தமிழகம் என்பதை “வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ்கூறும் நல் உலகம்” என்று தொல்காப்பியம் கூறுகிறது. தமிழகம், தமிழ்நாடு என்ற சொற்களை புறனாநூறு , சிலப்பதிகாரம் போன்ற .இலங்கியங்கள் அந்தக் காலத்திலேயே பதிவு செய்துள்ளன
.
இத்துணை தொன்மை மிக்கத் தமிழரின் தாயகத்தை நம் தலைமுறையில் இழக்கப்போகிறோமா? இழக்கக் கூடாது; இழக்க முடியாது!

தமிழர் தாயகம், அதில் தமிழர் வாழ்வுரிமை ஆகியவற்றைக் காக்கத் தமிழ்த் தேசியப் பேரியக்கம் பின்வரும் கோரிக்கைகளை முன்வைக்கிறது.

1. வெளிமாநிலங்களைச் சேர்ந்தவர்கள் தமிழ்நாட்டிற்குள் குடியேற வேண்டுமானால் அதற்கான அனுமதியைத் தமிழக அரசிடம் பெற வேண்டும். இதற்குரிய அதிகாரத்தைத் தமிழக அரசுக்கு இந்திய அரசு தர வேண்டும். இவ்வதிகாரத்தைத் தமிழக அரசு கேட்க வேண்டும். நாகாலாந்து, மிசோரம், போன்ற வடகிழக்கு மாநிலங்களில் நுழைய வேண்டுமானால் வெளிமாநிலத்தவர்கள் அம்மாநிலங்களின் அரசுகளிடம் அனுமதி பெற்றுத்தான் நுழைய முடியும். அம்மாநில அரசுகள் அயல் மாநிலத்தவர்களுக்கு அனுமதி வழங்கவோ அல்லது மறுக்கவோ அதிகாரம் (Inner line Permit system) பெற்றுள்ளன.

2. அன்றாடம் வந்து குவியும் வெளிமாநிலங்களைச் சேர்ந்தவர்கள் இங்கேயே நிரந்தரமாகத் தங்கி விடுவதைத் தடுத்திட, அவர்களுக்குக் குடும்ப அட்டை(ரேசன் கார்டு), வாக்காளர் அட்டை வழங்கக் கூடாது.

3. வெளிமாநிலத்தவர்கள் தமிழ்நாட்டில் சொத்து வாங்கத் தடை விதிக்க வேண்டும். இப்போது இந்த அதிகாரம் ஜம்மு காஷ்மீர் மற்றும் வடகிழக்கு மாநில அரசுகளுக்கு இருக்கிறது. கர்நாடகத்தில் விளை நிலங்களை வெளிமாநிலத்தவர் வாங்க முடியாது.

4. தமிழக வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்துள்ள 90 இலட்சம் பேர் வேலையின்றி இருக்கின்றனர். இந்திய அரசு, தமிழக அரசு, தனியார்துறை நிறுவனங்களில் வேலையிலுள்ள வெளிமாநிலத்தவர்களை வெளியேற்றிவிட்டு அந்த இடங்களில் தமிழகத்தில் வேலை கிடைக்காமல் வாடும் மண்ணின் மக்களுக்கு உடனடியாக வேலை வழங்கிட வேண்டும்.

5. தமிழ்நாட்டில் உள்ள இந்திய அரசு நிறுவனங்கள் அனைத்திலும் 80 விழுக்காடு வேலை மண்ணின் மக்களாகிய தமிழர்களுக்கு வழங்க வேண்டும்.

6. ஆள்பற்றாக்குறையால் வெளி மாநிலத் தொழிலாளர்களை அழைக்கும் நிலையை மாற்ற, தமிழகத்தின் ஊரகங்களில் வேலையில்லாமல் இருக்கும் இலட்சக்கணக்கான ஆண்களையும், பெண்களையும் வேலைக்கு ஈர்த்திட, தமிழக அரசு தனி முயற்சி எடுக்க வேண்டும். ஊதியம், வேலைப்பளு போன்றவை தமிழக இளையோரை ஈர்க்கும்வகையிலும், சட்டப்படியானதாகவும் இருக்க வேண்டும். இதனை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும். இதனை ஊக்கப்படுத்தும் வகையில், தமிழகத்தைச் சேர்ந்த சிறிய, நடுத்தரத் தொழில் முனைவோருக்கு, தமிழக அரசு தொழிலாளர் மானியம் வழங்க வேண்டும்.

நாம் எழுப்பியுள்ள மேற்கண்ட கோரிக்கைகள் பல, இந்தியாவில் பிற மாநிலங்களில் சட்டப்படி இருக்கின்ற உரிமைகள்தான்.

தமிழ் மக்களின் வாழ்வுரிமை கேள்விக் குறியாக உள்ளதைத் தடுத்திட, இம்மாநாட்டில் ஆழமான விவாதங்கள் நடைபெறும். மக்கள் திரள் போராட்டத் திட்டங்கள் வகுக்கப்படும்.

==============
வேண்டுகோள்!
==============
வெளியார் சிக்கலில் முனைப்புடன் உள்ள தமிழின உணர்வாளர்களும், அமைப்புகளும், சென்னையில் நடைபெறும் இம்மாநாட்டில் திரளாகப் பங்கேற்ககும், முடிந்தளவிற்கு மாநாட்டிற்கான கருத்தியல் ஆதரவு மட்டுமின்றி பொருளியல் உதவிகளையும் செய்ய வேண்டுமென அனைவரையும் அன்புரிமையுடன் கேட்டுக் கொள்கிறோம்!

அழையுங்கள்:
தோ
https://www.google.com/calendar/event?eid=MDltbGQyaGIwN3FiZG1maHM3ajMxbjBrNGMgNnBwa2Y5MnNwM29uZTBpN2FsN2lua2FobThAZw